ஜப்பானின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா மோட்டார் நிறுவனமும், நிசான் மோட்டார் கார்ப் நிறுவனமும், இணைப்புப் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இறுதி இணைப்பு ஒப்பந்தத்தில் ஜூன் மாதம் கையெழுத்திடவும், 2026ல் இணைப்பை முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோண்டாவின் தோஷிஹிரோ மைபே மற்றும் நிசானின் மகோடோ உச்சிடா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரண்டு நிறுவனங்களும் ஒரு ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன. புதிய நிறுவனத்தின் தலைவராக ஹோண்டாவின் பிரதிநிதி இருப்பார்.
நிசானின் கூட்டாளியான மிட்சுபிஷி மோட்டார்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர்கள் திங்கள்கிழமை காலை ஜப்பானின் போக்குவரத்து அமைச்சகத்திற்கு வந்தனர். இணைப்புப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு அதிகாரிகளிடம் விளக்கமளிக்க வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நிறுவனங்களும் இணைப்பு ஒப்பந்தத்தை முடித்த பிறகு, ஆகஸ்ட் 2026 இல் டோக்கியோ பங்குச் சந்தையில் ஹோல்டிங் நிறுவனத்தை பட்டியலிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.