மாட்ரிட்: ஐந்து தசாப்தங்களில் ஸ்பெயினில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158ஐ எட்டியுள்ளது. எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தெரியவில்லை. வலென்சியாவின் கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முழுமையாக நீரில் மூழ்கிய பல பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்களால் செல்ல முடியவில்லை.
வலென்சியாவில் ஒரு வருடத்திற்கான மழை எட்டு மணி நேரத்தில் பெய்தது. இந்த நிலைமை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஸ்பெயினின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. சேறும் சகதியுமாக இருந்ததால் சாலை போக்குவரத்து தடைபட்டது. ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தெருக்களில் கார்கள் மிதப்பதும், கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியும் காணப்பட்டது.
நேற்று 8 பேரின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்தனர். தண்ணீர் மற்றும் டாய்லெட் பேப்பர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக லா டோரிலிருந்து வலென்சியா நகர மையத்திற்கு துரியா ஆற்றின் குறுக்கே ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்றனர்.
மத்தியதரைக் கடலின் வெதுவெதுப்பான நீரில் குளிர்ந்த காற்று நகரும்போது ஏற்படும் 'குளிர் துளி' எனப்படும் ஒரு நிகழ்வால் கனமழை ஏற்படுகிறது. சில இடங்களில் 24 மணி நேரத்தில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. மக்கள் மிகவும் கவனமாக இருக்கவும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் முன்னதாக எச்சரித்திருந்தார்.